பெண்ணிடம் இருந்து 13 சவரன் தங்க நகை பறிப்பு

கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் மகாத்மா காந்தி நகர் பகுதியில் வீட்டின் வெளியே செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண் மணியின் கழுத்தில் இருந்த 13 சவரன் தங்க நகையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் மகாத்மா காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் ஜெய்சன். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் தவமணி (வயது 59). இவர் திருச்சியில் இருந்து இன்று (அக் 1) பிற்பகல் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் பகுதியில் இருக்கும் தனது மகனை பார்க்க வந்துள்ளார்.

பின்பு வீட்டின் வெளியே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தவமணியின் கழுத்தில் இருந்த சுமார். 13 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தெருக்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி