செங்கல்பட்டு: மதிமுகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகல்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் ம. தி. மு. க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது கட்சிக்கு எதிராக துரோகம் செய்து வருவதாக ம. தி. மு. க. பொது செயலாளர் வைகோ, மல்லை சத்யா மீது தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குற்றம் சுமத்தினார். மல்லை சத்யாவும் மகனுக்காக வைகோ தன் மீது துரோகி பட்டம் சுமத்தி வருவதாக பதிலடி கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் மல்லை சத்யாவுக்கு ஆதரவு தெரிவித்து திருப்போரூரில் ம. தி. மு. க. மாவட்ட அவை தலைவர் புலவர் கங்காதரன் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ம. தி. மு. க. மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் 100 பேர் திருப்போரூர் ரவுண்டானா அருகே திரண்டனர். அப்போது வைகோ மற்றும் துரைவைகோவுக்கு எதிராகவும், மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும் சாலையில் நின்று கோஷம் எழுப்பினர். 

அப்போது மல்லை சத்யாவை துரோகி என கூறிய வைகோவை கண்டித்து, ம. தி. மு. க. நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொடியுடன் உள்ள தங்கள் கார்களை வரிசையாக நிறுத்தினர். பின்னர் கார்களில் இருந்த ம. தி. மு. க. கொடியை கழற்றி வீசி எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் (மதிமுக) இருந்து விலகுவதாக அறிவித்தனர். 

அப்போது கொடிகளையும், உறுப்பினர் அட்டைகளையும் அட்டைப்பெட்டியில் வீசி எறிந்தனர். அதேபோல் கார்களில் இருந்த ம. தி. மு. க. கட்சி சின்னம், வைகோ படம், ஸ்டிக்கர்களையும் கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்ததை காண முடிந்தது.

தொடர்புடைய செய்தி