மதுராந்தகம்: ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அடி, உதை

விழுப்புரம் மாவட்டம் கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வழியாக செல்லும் விழுப்புரம்-சென்னை பயணியர் ரயில் தினமும் பயணம் செய்து வருகிறார். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த பெண்கள் இருவர் தினமும், மதுராந்தகத்திலிருந்து இந்த ரயில் மூலமாக சென்னை செல்கின்றனர். 

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன், அவ்வப்போது மதுராந்தகத்திலிருந்து வரும் இரண்டு பெண்களிடம் ஆபாசமாக பேசியும், பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல் இன்றும் பார்த்திபன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் பார்த்திபனை ரயிலில் இருந்து இறக்கி அடித்துள்ளனர். தொடர்ந்து பார்த்திபனை பிடித்து அருகில் இருந்த மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்திபன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வழக்கை செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி