இப்பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின் இல்லச்சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், கருங்குழி, படாளம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால் அதிக செலவும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. வேடந்தாங்கலில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமுதாய நலக்கூடம், தற்போது விரிசல் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதை இடித்து அப்புறப்படுத்தி, அதே இடத்தில் புதிதாக சமுதாய நலக்கூடம் மற்றும் உணவு பரிமாறும் இடம், சமையல் தயாரிப்புக் கூடம் என, அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்டினால், கிராமவாசிகள் பயனடைவர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.