தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகியாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்த சூரிய நாராயணன் உடல் நலக்குறைவாக காலமானார்.
வாய்ப்புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12. 30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யநாராயணனின் உடல் செங்கல்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், மாநில பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து உயிரிழந்த சூரிய நாராயணன் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுசெயலாளர் ஆனந்த், சூர்யா நாராயணன் உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது, அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம், அவருடைய குடும்பத்தாருடன் தமிழக வெற்றிக்கழகம் எப்போதும் துணை நிற்கும் என பேசினார்.