மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், 33 இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு, இதுவரை பணம் வழங்கவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, கலெக்டர் வளாகத்தின் வெளியே, வந்தவாசி சாலையில், விவசாயிகள் நேற்று, மறியல் போராட்டம் நடத்தினர். அவ்வழியே சென்ற வாகனங்கள் இருபுறங்களிலும் வரிசைகட்டி நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகளிடம் போலீசார் சமாதானம் செய்தனர். இருப்பினும், விவசாயிகள், போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின், விவசாயிகளை சமாதானம் செய்த போலீசார், கலெக்டர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். நெல் மூட்டைகளுக்கு விரைந்து பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தரப்பிலும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் தரப்பிலும் பதில் அளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.