செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே காட்டூர் கிராமத்தில் இன்று காலை தங்களின் விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் வயல் பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதையும், அதன் அருகே கட்டிங் மெஷின்கள் கிடப்பதையும் பார்த்தனர். இதையடுத்து காயார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மின்சார வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இறந்து கிடந்த நபர்கள் யார், எந்த ஊர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால், அவர்கள் சடலத்தின் அருகில் மின் வயர்களை துண்டிப்பதற்கு தேவையான உபகரணங்கள் இருப்பதை பார்த்தனர். ஒருவேளை இரவு நேரங்களில் மின் வயர்களை திருடும் கும்பலாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வெண்பேடு கிராம நிர்வாக அலுவலர் மகாதேவன் கொடுத்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.