திருவண்ணாமலையில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இடைநில்லா பேருந்து என்பதால் நடத்துனர் இல்லாமல் ஓட்டுநர் மட்டுமே அரசு பேருந்தை இயக்கி வந்துள்ளார். அப்போது அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென பிரேக் டவுன் ஆகி நடுரோட்டில் நின்றது.
இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்த நிலையில் நடுவழியிலேயே பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து பேருந்தில் வந்த பயணிகள் ஓட்டுநரிடம் சென்று செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு பேருந்து பயணச்சீட்டுக்கான கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு அரசு பேருந்து ஓட்டுநர் முறையாக பதில் அளிக்காமல் பயணச்சீட்டு கட்டணத்தைக் கேட்ட பயணிகளிடம் நாளை (டிசம்பர் 20) பேருந்து நிலையத்திற்கு வந்து கட்டணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயணிகளை சமாதானம் செய்த ஓட்டுநர் மாற்று பேருந்து மூலமாக அனைத்து பயணிகளையும் அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.