வாலாஜாபாத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டமாக திரியும் நாய்கள், சாலையோரம் கிடைப்பதை உண்டு சுற்றித்திரிகின்றன. இவைகளால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். 

தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும்போது, சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர், வாலாஜாபாத்தில் தங்கி சுற்றுவட்டார தனியார் தொழிற்சாலைகளில் பணி செய்கின்றனர். 

இத்தொழிலாளர்கள், பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது, தெருக்களில் நாய்கள் துரத்துவதால் தினமும் அச்சப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோரையும் துரத்திக் கொண்டே வருவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுதல், அல்லது பள்ளத்தில் விழுந்து காயமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி