தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த ரூ. 3.6 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தும் சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. 

இதற்கிடையே, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, குறிப்பிட்ட சிலர் வாயிலாக கஞ்சா கடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, நேற்று முன்தினம் ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில், தரையிறங்கும் விமானங்களை கண்காணித்து வந்தனர். அப்போது, தாய் ஏர்வேஸ் விமானம் வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை சோதனை செய்து வந்தனர். 

அதில் வந்த, சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் எழுந்த அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசி, வாக்குவாதம் செய்துள்ளார். அதனால், அவர் வைத்திருந்த 'லக்கேஜ்'களை ஆய்வு செய்ததில், தனியறை அமைத்து, உயர்தர கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அதில் இருந்த, 3.5 கிலோ கஞ்சாவின் மதிப்பு, 3.6 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த நவம்பர் மாதம் முதல், கடந்த வாரம் வரை, சென்னை விமான நிலையத்தில், 14 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்டதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி