கூட்டத்தில் மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் கு. கோகிலா தங்கமுத்து சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பேசும்போது, பள்ளபாளையம் பேரூராட்சி முழுவதும் குக்கிராமங்கள் அடங்கிய பகுதியாக உள்ளது.
இந்த கிராமப்பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதேபோல அருகில் உள்ள நகர்ப் பகுதிகளில் வேலைக்கு செல்பவர்களுக்கும் உரிய பேருந்து வசதி இல்லை.
கிராமப்புற மக்களுக்கு பொது போக்குவரத்துக்கான பேருந்து வசதி இல்லாததால் பேரோடு, கரட்டுப்பாளையம், ஐயங்காட்டு வலசு, ஸ்டார்த்தி நகர் மற்றும் அய்யன் வலசு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்குச் செல்லும் பொது மக்களும் போக்குவரத்து வசதி இல்லாததால் சரியான நேரத்திற்கு சென்று வர முடிவதில்லை.
எனவே காலை, மாலை உள்ளிட்ட குறிப்பிட்ட நேரங்களில் மேற்கண்ட பகுதிகளை நகர் பகுதியுடன் இணைக்கும் வகையில் மினி பேருந்து வசதியை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட அமைச்சர் சு. முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேரூராட்சி சார்பில் கோரிக்கை விடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.