இந்த கண்காட்சியானது வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சர்க்கரைத்துறை, வேளாண் பொறியியல்துறை என 13 தலைப்புகளின் கீழ் 218 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 3-வது நாள் மற்றும் நிறைவு நாளான நேற்று ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாமல் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அவர்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
முகப்பில் நவீன முறையில் சோளப்பயிர் சாகுபடி, விதவிதமான நெல் விதைகளுடன் சாகுபடி தொழில்நுட்ப காட்சி திடல், நகர்த்தி வைக்கும் வகையிலான மாட்டுப்பட்டி, கரும்பை வெட்டி, கட்டாக்கி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றும் இயந்திரம், வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் பல்வேறு நவீன இயந்திரங்களை பார்வையிட்டதுடன், செயல்பாடுகளை விவசாயிகளும், பொதுமக்களும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். வேளாண் கண்காட்சி நேற்று மாலை 7 மணியுடன் நிறைவு பெற்றதால், விவசாயிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.