இந்த கோவிலின் திருநீரை உடலில் பூசினால் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தின் திங்கட்கிழமைகளில் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கியது. இதற்காக ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காத்திருந்தனர். பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து நஞ்சுண்டேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
இதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக கோவில் வளாகத்தில் உள்ள பழனியாண்டவருக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். வெள்ளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முதலுதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.