கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 13) காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்த நிலையில், கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: -ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையை பயன்படுத்தி, கனிராவுத்தர் குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய்வுபட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே, மீன்களின் இறப்பிற்கான காரணத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதியினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி