ஈரோட்டில் பலத்த மழை

ஈரோட்டில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. நேற்று மாலையில் திடீரென வானம் மேகமூட்டமாக மாறியது. 5.30 மணிஅளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அப்போது சூறைக்காற்று பலமாக வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ஈரோடு பெருந்துறைரோடு, ஈ.வி.என். ரோடு, காந்திஜிரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு), ஆர்.கே.வி. ரோடு உள்ளிட்ட இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் திணறினர்.

வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. சூறைக்காற்று வீசியதால் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்துக்கொண்டு செல்வதற்கே சிரமம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மேற்கொண்டு வாகனத்தை ஓட்ட முடியாமல் சாலையோரமாக நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கினர். ஈரோடு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், பெரியவலசு, சூரம்பட்டி, ரெயில் நிலையம், ரங்கம்பாளையம், கொல்லம்பாளையம் என ஈரோடு மாநகரில் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது. ரங்கம்பாளையம், திண்டல், ஈரோடு பஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி