சமீபத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குட்கா பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, உணவுப் பாதுகாப்புத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் காவல்துறை தீவிரமாக செயல்பட வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுந்தரா அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட முழுவதும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறையினர் இணைந்து, காவிரி சாலையில் உள்ள மளிகை கடை, டீ கடை, தள்ளுவண்டி என 20க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டி கடையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.3 கிலோ குட்கா மற்றும் 1.5 கிலோ பீடி, சிகரெட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.