அந்தியூர் வட்டார அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், பர்கூர் மற்றும் ஓசூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின கர்ப்பிணித் தாய்மார்களுடன் சமத்துவம், ஒற்றுமை மற்றும் தாய்–சேய் நலனை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்றது. அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து, கதிரவனை வழிபட்டு, சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் இணைந்து விழாவை கொண்டாடினர். மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தாய்–சேய் நலம், ஊட்டச்சத்து மற்றும் கர்ப்ப பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் தனது சொந்த செலவில் 75-க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.