கோபி: காட்டுப்பன்றியை வேட்டையாடி வைத்திருந்த 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதியானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனால் இந்த வனப்பகுதி முழுவதும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வனப்பகுதி அருகே உள்ள வினோபா நகரில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருப்பதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்றபோது, கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த 6 பேரில் 3 பேர் தப்பியோடினர். அதைத்தொடர்ந்து பிடிபட்ட மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காட்டுப்பன்றியை வேட்டையாடியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வினோபா நகரைச் சேர்ந்த நவீன் (23), வசந்த் பிரியன் (20), அய்யப்பன் (38) ஆகியோரை வனஉயிரினச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். 

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தலைமறைவாகிய பெரியசாமி, கருப்புசாமி, சின்னையன் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி