சூரம்பட்டி அருகே பீரோவை திறந்து 33 பவுன் நகை திருட்டு

ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பேகம் (55). இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்டம் வன்னிப்பாடியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி பேகம் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் உள்ள பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவைப் பார்த்தார். 

அப்போது பீரோ லாக்கரில் இருந்த 33 பவுன் நகை திருட்டுப் போயிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பணிப்பெண் ஜாஸ்மினும் மாயமாகி இருந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் விசாரணையில் ஜாஸ்மின் தான் பீரோவில் உள்ள நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

 இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வன்னிப்பாடியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த ஜாஸ்மினை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது 33 பவுன் நகையைத் திருடியதை ஜாஸ்மின் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, நகை மாயமானது முதல் ஜாஸ்மினும் மாயமாகித் தலைமறைவாகிவிட்டார்.

தொடர்புடைய செய்தி