காலிங்கராயன் வாய்க்காலுக்கு நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசன நிலங்களுக்கு 2025-2026-ம் ஆண்டு முதல் பொக பாசனத்துக்கு 16-6-2025 (நாளை மறுநாள்) தண்ணீர் திறக்கப்படுகிறது. 13-10-2025-ம் தேதி வரை மொத்தம் 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு திறக்கப்பட உள்ளது. பாசனப்பகுதியில் கடைமடை பகுதிகளிலும் தண்ணீர் தடையின்றி செல்ல வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கிடையே பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் பாசனத்துக்காக நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடி யாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 83.21 அடியாக இருந்தது. குடிநீருக்காக வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி