ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தொட்டம்பாளையம் மற்றும் விண்ணப்பள்ளி ஊராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் விண்ணப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த புதுரோடு பகுதி பொதுமக்கள் இன்று (ஜூலை 31) சத்தியமங்கலம் கோவை சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சத்தியமங்கலம் கோவை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.