ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமம் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. நேற்று மாலை கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 15 யானைகள் தமிழக வனப்பகுதியை ஒட்டி உள்ள குருபரகுண்டி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளன.
யானை கூட்டங்கள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர். யானை கூட்டங்கள் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் எனவும், தொடர்ந்து மாநில எல்லையில் முகாமிட்டுள்ள யானைகளை அடந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.