ஈரோடு: பள்ளி நிர்வாகியை மிரட்டியதாக மேலும் ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி- நம்பியூர் ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அனைத்து மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர். 

அப்போது மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பைபிள் வாசகங்கள் புத்தகங்களை கொடுத்தது தவறு என நல்லூரைச் சேர்ந்த ஹரிஹரன் (23) பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பின்னர் அவர் சிலரை தன்னுடன் அழைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் சென்று முதல்வரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 26) நல்லூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர். கைதான ஹரிஹரன் மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி