சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் மாணவியை பலாத்காரம் செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதைப்போல் பாஜக நிர்வாகிகள் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் பவானி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கவுந்தப்பாடி பகுதியில் பாஜக சார்பில் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்ளும் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.