ஈரோடு கார்மல் பள்ளி அருகே குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வீட்டுத் தோட்டத்தில் பழைய இரும்பு பைப்புகள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு நாட்களாக இவர் வீட்டில் வளர்த்து வரும் நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை அவர் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் ஒருவர் தோட்டத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த தவளையை பாம்பு ஒன்று கடிக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் விக்னேஷ்வரனிடம் கூறினார்.
இதையடுத்து அவர் பாம்பு பிடி வீரர் யுவராஜிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். யுவராஜ் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தார். அப்போது வீட்டின் தோட்டப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்புகளின் அடியில் பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர் சாதுர்யமாக அந்தப் பாம்பைப் பிடித்தார். பிடிக்கப்பட்ட பாம்பு 9 அடி நீளமுள்ள மஞ்சள் சாரைப் பாம்பு என தெரியவந்தது. இதை எடுத்து யுவராஜ் பாம்பைப் பிடித்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்.