ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார், ஆசனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, மைசூரில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி வந்த அசோக் லைலண்ட் வாகனத்தை நிறுத்தி, போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ. 51,100 மதிப்பிலான 70 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து போலீசார், லாரியை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் புதூர் முத்தையபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (42) என்பவரை கைது செய்தனர்.