பவானி ஆற்றில் மூழ்கி இறந்த கோவை டிரைவர் உடல் மீட்பு

கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (40). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் (டிச.30) நண்பர்கள் முரளிதரன் முருகன், சிலம்பரசன் ஆகியோருடன் சேர்ந்து பவானிசாகர் அணை பூங்காவிற்கு வந்துள்ளனர்.

பவானிசாகர் அணை பூங்கா அருகே பவானி ஆற்றில் இறங்கி குளித்த போது அபுதாகிர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். உடனடியாக அவரது நண்பர்கள் பவானிசாகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை எடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கி மாயமான டிரைவரை தேடும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை வரை தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் பணி கைவிடப்பட்டது. 

நேற்று (டிச.31) தொடர்ந்து காலை தேடும் பணி தொடங்கியது. மதியம் வட்டப்பாறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் அபுதாகிரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த அபுதாகிருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி