வேடசந்தூர்: பெண் மருத்துவரை தாக்கி நகை பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் (75). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சிவானந்தம் (68). அரசு மருத்துவர். இவர்களது மகன் வெளியூரில் வசித்து வருகிறார். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர்களது மகள், நேருஜி நகரிலேயே மற்றொரு தெருவில் வசித்து வருகிறாள். 

இந்த நிலையில், பழனியப்பன் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுவிட்ட நிலையில், சிவானந்தம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பிற்பகலில் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் சிவானந்தத்தை மிரட்டி அவர் அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றார். ஆனால், அவர் அதை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால், பாதி சங்கிலி மட்டுமே அந்த நபரின் கையில் சிக்கியது. மேலும், அவர் அணிந்திருந்த கம்மலை அந்த நபர் பறிக்க முயன்றார். 

சிவானந்தத்தின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததையடுத்து, அந்த நபர் கம்மலை விட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டார். காதில் காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி