வேடசந்தூர்: கல்லூரி மாணவி கடத்தல்; பெண் உள்பட 5 போ் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்தபோது, மர்மநபர்கள் ஆம்னி வேனில் மாணவியை கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக புகாரின்பேரில் கரூர் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், கடத்தியவர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவியை கடத்திச் சென்ற வேன் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள கோடங்கிபட்டியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் அங்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, பொன்னம்மாள் என்பவரது வீட்டில் இருந்த மாணவியை மீட்டனர். பின்னர், மாணவியை கடத்தியதாக அம்மாபட்டியைச் சேர்ந்த நந்தகோபால்(30), அவரது தாய் கலா(50), நந்தகோபாலின் நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி(32), பழனிச்சாமி(40), சரவணன் (28) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் நந்தகோபால் மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதலை வெளிப்படுத்தியபோது மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் மாணவியை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. 

பொன்னம்மாள் நந்தகோபாலின் பாட்டி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். மேலும் நந்தகோபால் உள்பட 5 பேரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி