வேடசந்தூர்: கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் (வயது 43). இவர் ஒரு காரில் தனது மனைவி பிண்டு (37), மகன் ரூபன் (10), மகள் நியா (3) ஆகியோருடன் கேரள மாநிலத்திற்கு சென்றார். அந்த காரை சுஜித் ஓட்டிச்சென்றார். திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த தங்கம்மாபட்டி பஸ் ஸ்டாப் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மலைத்தேனீக்கூட்டம் பறந்து வந்து கார் கண்ணாடியில் மோதி கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் சிறுமி நியா மட்டும் லேசாக காயமடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி