திண்டுக்கல்: காரின் டயர் வெடித்து கோர விபத்து (VIDEO)

திண்டுக்கல் அருகே உள்ள பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பஜூல் ஹக்(வயது 39). இவர் தனது மனைவி அமீனா பேகம் மற்றும் 3 மகன்களுடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு காரில் சென்றார். மீண்டும் அனைவரும் சேலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். 

அந்தக் காரை பஜூல் ஹக் ஓட்டிச்சென்றார். கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி பகுதியில் கார் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பஜூல் ஹக்கின் மனைவி அமீனா பேகம்(35) மகன்கள் நூருல் அமீன்(12), அய்மன்(6), அயான்(6) (இரட்டையர்கள்) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். பஜூல் ஹக் காயங்களின்றி உயிர் தப்பினார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே நூருல் அமீன் உயிரிழந்தார். படுகாயமடைந்த அமீனா பேகம், அய்மன், அயான் ஆகிய 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி