விடுதலை சிறுத்தை வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் விடுதலை வளவன், பேரூராட்சி செயலாளர் நாகூர் மைதீன், துணை ஒன்றிய செயலாளர் முத்து கணேஷ், தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் பொன் கண்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம், உசிலம்பட்டி ஊராட்சியில், புதுசாலை முதல் வெள்ளையகவுண்டனூர் செல்லும் சாலை உசிலம்பட்டி நான்கு சாலை சந்திப்பு முதல் எட்டப்பநாயக்கனூர், நவாமரத்துப்பட்டி, தெத்துப்பட்டி, செல்லாக்கவுண்டனூர், பாறைத்தோட்டம் வழியாக வெள்ளையகவுண்டனூர் வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.
மேலும் தரைப்பாலத்தின் கைப்பிடி சுவரையும் மாற்றித்தரக்கோரி பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.