திண்டுக்கல்: முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டை குமார் தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் சுகுணா, தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, நலம் அமைப்பாளர் செல்வம், முன்னாள் படைவீரர் மருத்துவ அலுவலர் லெப்டினன்ட் கர்னல் வீரமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்தனர். 

நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டுக் கடன் மானியம், தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் வட்டி மானியம், வங்கிக் கடன் வட்டி மானியம், கண்ணாடி மானியம், வீட்டுவரி மானியம் என மொத்தம் 27 பேருக்கு ரூ. 6,24,456 நலத்திட்ட உதவிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டை குமார் வழங்கினார். அதன்பின், முன்னாள் படைவீரர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி