திண்டுக்கல்: ஹாக்கி போட்டியில் மாணவர்களுக்கிடையே மோதல்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி இன்று ஜிடிஎன் தனியார் கல்லூரியில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளியின் கோல் கீப்பராக இருந்த தேவா மீது ஜிடிஎன் கல்லூரி மாணவர்கள் விளையாடாமல் கல்லை எறிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவா ஹாக்கி கேப்டன் சந்தோஷ் இடம் தெரிவித்துள்ளார். சந்தோஷ் நடுவரிடம் தெரிவிக்க, உடனடியாக அங்கு இருந்த ஜிடிஎன் கல்லூரி ஹாக்கி பயிற்சியாளர் ராமானுஜம் எங்கள் மாணவர்களை எப்படி குறை கூற முடியும் என ஆபாசவார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மாணவர்கள் எங்களை எவ்வாறு ஆபாசவார்த்தையில் பேசலாம் என கேட்டபோது ஜிடிஎன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பள்ளி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் இனிய, பூபதி மற்றும் சந்தோஷ் ஆகிய மாணவர்கள் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜிடிஎன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் மீது புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி