பழனி: கைகளில் சூடம் ஏந்தி அரோகரா கோசம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முருகப் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 

தைப்பூசத் திருவிழா இன்று அதிகாலை சண்முக நதி இடுமன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய பகவானை வணங்கியும், கைகளில் சூடம் ஏற்றியும் அரோகரா, அரோகரா என்ற கோசத்துடன் வழிபட்டு வருகின்றனர். மேலும் ஆண்களும் பெண்களும் முருகன் பக்தி பாடல்களை பாடிப்படி கிரிவலம் வந்து மலை மீது சாமி தரிசனம் செய்யச் செல்கின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் சாமி தரிசனத்திற்கு மலை மீது செல்லக்கூடிய பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி