தாண்டிக்குடி: கீழ்மலைக் கிராமங்களில் சட்டவிரோத மது விற்பனை

திண்டுக்கல் மாவட்டம், கீழ் மலைப் பகுதியில் பன்றிமலை, ஆடலூா், கேசி. பட்டி, பாச்சலூா், தாண்டிக்குடி உள்பட 15-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஆடலூா் பகுதியில் மட்டுமே டாஸ்மாக் கடை உள்ளது. ஆனாலும், தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, கே. சி. பட்டி, குப்பம்மாள்பட்டி, பெரியூா், பள்ளத்துக்கால்வாய், நடுப்பட்டி, பாச்சலூா், கொரன்கொம்பு, சோலைக்காடு உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்திருக்கிறது. சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வேண்டிய காவல் துறை மலைப் பகுதிகளின் மீது எந்தவித கவனமும் செலுத்துவதில்லை. இதனால், பள்ளி மாணவா்களும் மதுக் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுவைக் குடித்துவிட்டு கண்ணாடி புட்டிகளை வனப் பகுதியில் வீசிச் செல்வதால் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சிலா் நேரடியாகவே இந்த மது விற்பனையில் ஈடுபடுகின்றனா். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த சட்டவிரோத மாது விற்பனையைத் தடுக்கவும், பழங்குடியின மக்களின் எதிா்காலத்தை குறிப்பாக பெண்கள், சிறாா்களைப் பாதுகாக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி