ஒட்டன்சத்திரம்: உண்ணி காய்ச்சலால் ஒருவர் பலி

திண்டுக்கல்லை சேர்ந்த முதியவர் பழனிசாமி (61) உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவரும் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட இருவரையும் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். 

மேலும் திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசைவலி, வாந்தி, தொண்டைவலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். சாதாரண காய்ச்சல் என மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி