பக்தர்கள் மலையேறுவதற்கு முன் அடித்தள மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார் சந்நிதிகளில் வழிபட்டுச் செல்கின்றனர். மலை மீதுள்ள கோயில் கருவறையில், கண்ணபிரான் எனும் கோபிநாதன் தம் கைகளால் புல்லாங்குழல் பிடித்து ஊதுகின்ற தோரணையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அடுத்ததாக, உற்சவமூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகளை வைத்து காட்சியளிக்கிறார். கருவறையில் இடதுபுறம் தாயார் கோப்பம்மாள் எழுந்தருளியுள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தி விழா நாட்களில் மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு இறங்கி வந்து கிராமப்புறங்களில் திருஉலா சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் உபகோயிலான கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் தங்கி, பின்னர் மலைக்கோயிலுக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்வு நடைபெறும். கொத்தப்புள்ளி கோயிலில் கோபிநாதசுவாமி தங்கியிருக்கும் நாளில் உறியடித்திருவிழா நடைபெறுகிறது.