கொடைக்கானல்: கோடை விழா படகுப் போட்டி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 62-ஆவது மலர்க் கண்காட்சி கடந்த மே 24ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாத் துறை சார்பில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட படகுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு தொடங்கிவைத்தார். 

சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் மேலாளர் காதர் பரிசுகளை வழங்கினார். சுற்றுலா உதவி அலுவலர் சுதா நன்றி கூறினார். 

திட்டமிடப்படாத படகுப் போட்டி: கோடை விழா தொடங்கியதிலிருந்தே தினமும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டியும், படகு அலங்காரப் போட்டிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில், மழை பெய்யாததால் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென பிற்பகலில் படகுப் போட்டி நடைபெற்றது. இதனால், போட்டியில் பொதுமக்கள் சிலரே கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி