திண்டுக்கல் நீதி விநாயகர் கோவில் வளாகத்தில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அளித்த பேட்டியில், இந்து அறநிலையத்துறை கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்கள் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் போது பூஜாரிகள் பேரமைப்பைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு இலவச பட்டா, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் வழங்கும் வட்டியில்லா கடனில் பூஜாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்து அறநிலையத் துறை கோயில்களில் பூஜாரிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதை பூஜாரிகள் பேரமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் துறையும் அரசும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி பூஜாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்பு தரிசனம் அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார், மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் குமார் உள்ளிட்ட மாவட்ட மாநகர ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.