சின்னாளபட்டி: நோயாளியிடம் நகையை திருடிய கணவன் மனைவி கைது

திண்டுக்கல் நகரை சேர்ந்தவர் மீரா மொகைதீன். இவரது மனைவி சர்மிளா (வயது 31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சின்னாளப்பட்டி கஸ்தூரிபா மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி சர்மிளாவின் பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதில் 4 பவுன் நகை இருந்தது. சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சர்மிளாவின் சகோதரர் காதர் ஒலி புகார் செய்தார். அதன்பேரில் சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வந்தனர். 

மேலும் குற்றவாளியைக் கைது செய்ய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோமதி, மணிவர்மா, பாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வலையப்பட்டியை சேர்ந்த கதிர்வேல் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (38) என்பவர் மருத்துவமனையில் புகுந்து சர்மிளாவின் பையைத் திருடி மருத்துவமனை வெளியில் நின்றுகொண்டிருந்த அவரது கணவர் கதிர்வேல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் கதிர்வேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கதிர்வேலை மதுரை சிறையிலும், தமிழ்ச்செல்வியை நிலக்கோட்டை சிறையிலும் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி