ஆத்தூர்: செத்து மிதக்கும் மீன்கள் (VIDEO)

திண்டுக்கல், ஆத்தூர் தாலுக்கா, ரெட்டியார் சத்திரம் ஊராட்சி, புதுப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஆலாங்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இதனை சுற்றி ஜெயம் நகர், காமாட்சிபுரம், கொட்டப்பட்டி, புதுப்பட்டி, பொன்மாந்துரை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்த குளத்தில் மாநகராட்சி பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர்கள் வருவதால் ஏற்கனவே கண்மாய் மாசடைந்து காணப்பட்டு வந்துள்ளது. இதனால் உலகம் புகழ்பெற்ற கொட்டப்பட்டி கத்திரிக்காய் விவசாயமும் அழிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 12) இரவு முதல் ஆலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து வருகிறது. குளத்தில் தற்போது ரசாயனம் கலந்த கழிவுநீர் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா? அல்லது திண்டுக்கல்லிலுள்ள 48 வார்டு மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் இக்குளத்திற்கு வருவதே இதற்கான காரணமா என்று தெரியவில்லை. 

மேலும், மாநகராட்சியிலிருந்து வெளிவரும் கழிவு நீர்களை சுத்திகரித்து குளத்தில் விடவும், குளத்தை தூர்வாரவும் பலமுறை மனு அளித்து அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது செத்து மிதக்கும் மீன்களால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை சரிசெய்ய உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி