தர்மபுரி: தனியார் பள்ளி தாளாளர் கடத்தல்; 6 பேர் கைது

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி தனியார் பள்ளி தாளாளர். இனியவன் அரசு பள்ளி ஆசிரியர். செம்முனி, 15 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஒப்பந்த அடிப்படையில் இனியவனின் தாயார் அமிர்த்தவள்ளிக்கு பள்ளியை கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் முதல் நடத்திக்கொள்ள எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது வரும் லாபத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால் பள்ளிக்கு அங்கீகாரத்தை செம்முனி பெற்றுத் தராமல் இருந்துள்ளார். 

இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டும் செம்முனி தராததால் ஏ.பள்ளிப்பட்டி காவல்நிலையத்தில் அமிர்த்தவள்ளி கடந்த மாதம் புகார் கொடுத்தார். இந்தநிலையில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி சாய்பாபா கோவிலுக்கு வந்த செம்முனியை இனியவன் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாய்பாபா அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலர்கள் விரைந்து சென்று புதுப்பட்டி சுங்கச்சாவடியில் காரை மடக்கிப் பிடித்து பள்ளி தாளாளரை மீட்டனர். இந்தக் கடத்தல் தொடர்பாக இனியவன், மருக்காலம்பட்டியை சேர்ந்த தீர்த்தகிரி, அம்பேத்குமார், சுரேஷ், மனோஜ்குமார், மற்றும் மூக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த யசேந்திரன் ஆகிய 6 நபர்களை காவலர்கள் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி