தர்மபுரி: பாம்புடன் அட்டகாசம் செய்தவர் மீது வழக்கு பதிவு

தர்மபுரி நகரில் 11.06.2025 அன்று இரவு நான்கு சாலை சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 2808 என்ற கடைக்கு சூர்யா (எ) சண்முக சுந்தரம் செட்டிக்கரை பகுதியை சேர்ந்தவர், இறந்து போன சாரைப் பாம்பை தன்னுடைய கழுத்தில் சுற்றிக்கொண்டு மதுபானக்கடை வாடிக்கையாளர்களிடமும், மதுபானக்கடை ஊழியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பாம்பைக் காட்டி தனக்கு மதுபானம் வழங்க வேண்டும் என்று அவர்களை அச்சுறுத்தியிருக்கிறார். 

மேலும், பாம்பிற்கு முத்தம் கொடுத்ததுடன், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலிலிருந்து இறந்த பாம்பிற்கு பீர் ஊற்றவும் முயற்சித்திருக்கிறார். மேலும், சாலைகளில் செல்வோர்களிடம் பாம்பை காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்டதுடன், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுத்தியுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த தருமபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர், சூர்யா (எ) சண்முக சுந்தரம் மிகவும் குடிபோதையில் இருந்ததால், அவரிடமிருந்த இறந்த பாம்பை பெற்று அப்புறப்படுத்திவிட்டு, அவரை காலை 10.00 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி எச்சரித்து அனுப்பியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து நேற்று (12.06.2025) காலை 11.00 மணிக்கு மேற்படி சம்பவம் குறித்து மேற்படி மதுபானக் கடை மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி