தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலைகள் விற்பனைக்காகவே சிறப்பு வார சந்தை நடைபெறுகிறது. இந்த வார சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர். வெற்றிலையானது 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் நேற்று நடைபெற்ற வெற்றிலை வாரச்சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 6000 ரூபாய்க்கு தொடங்கி அதிகபட்சமாக 12000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.