தர்மபுரி: விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு உறவினர்கள் சாலைமறியல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் அடுத்த பல்லேன அள்ளி புதூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன், மனைவி அயித்தா இவர் கடந்த 12ம் தேதி, அனுமந்தபுரத்துக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழையூர் அருகே சென்றபோது அந்த வழியே இருசக்கர வந்த நபர், அயித்தா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அயித்தா உயிரிழந்தார்.

இந்நிலையில், அயித்தாவின் உயிரிழப்பிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அவரது உறவினர்கள் பாலக்கோடு - காரிமங்கலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, காரிமங்கலம் காவலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி