தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே நிலப் பிரச்சனை தொடர்பாக தீக்குளிக்க முயன்ற கேத்துரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகனை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, முருகன் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார் விசாரணை நடத்தியதில், நிலப் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் இவ்வாறு முயன்றது தெரியவந்தது. தர்மபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.