தர்மபுரி: பஸ் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் கோடாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் தனியார் பேருந்து ஓட்டுநர். இவரும், காரிமங்கலம் ஐயர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். சுரேஷ் கடந்த ஒரு வாரமாக மோகனுக்கு மது வாங்கி தராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சுரேஷ் காரிமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள சந்தைபேட்டையில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மோகன் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மோகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷின் தலையில் வெட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் சுரேஷ் அலறியுள்ளார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த மோகன் அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மோகனை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி