தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஸ் இன்று (08.06.2025) ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முறிவு சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.