கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் ஜெயபிரகாஷ்(12). இவர் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்தவுடன் விடுதி சென்று அங்கிருந்து வீட்டிற்கு புறப்படுவதற்காக இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டி. புதுப்பாளையத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரது இருசக்கர வாகனத்தில் மாணவன் ஜெயபிரகாஷ் சென்ற போது, அரகண்டநல்லூர் காவல் நிலையம் எதிரே அரசு நகரப் பேருந்தும் இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது வாகனத்தை ஓட்டிச் சென்று ஐயப்பன் சிறிய காயங்களுடன் தப்பிவிட, பின்னால் அமர்ந்து சென்ற பள்ளி மாணவன் ஜெயபிரகாஷ்(12) பலத்த காயமடைந்துள்ளான்.
உடனடியாக அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.